தமிழ்நாடு

இல்லாத டோல்கேட்-க்கு கூடுதல் கட்டணம்! கும்பகோணம் போக்குவரத்து கழகம் மீது பயணிகள் புகார்

webteam

தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை இடையே மொத்த பயண தூரம் 50 கிலோமீட்டர் ஆகும். இந்த வழிதடத்தில் ஒரத்தநாடு, பாப்பாநாடு, மேலஉளூர் என சுமார் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைத்திற்கும் பட்டுக்கோட்டை செல்ல வேண்டும், இல்லை என்றால் தஞ்சைக்கு வர வேண்டும். இந்நிலையில் தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை செல்வதற்கு பேருந்து கட்டணம் 36 ரூபாய். ஆனால் 90% அரசு பேருந்துகளில் 45 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அதாவது காப்பீடு மற்றும் சுங்கவரி என கூடுதலாக ஒன்பது ரூபாய் வசூலிப்பதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பயணிகள் கூறுகையில் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் கட்டணம் வெறும் 36 ரூபாய். ஆனால் கும்பகோணம் கோட்டக் கழக பேருந்துகளில் காப்பீடு மற்றும் சுங்கவரி என கூடுதலாக ஒன்பது ரூபாய் சேர்த்து 45 கட்டணம் வாங்குகின்றனர். ஆனால் தஞ்சை - பட்டுக்கோட்டை சாலையில் சுங்கசாவடியே கிடையாது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்திலே ஒரு சுங்கசாவடி கூட கிடையாது. அப்படி இருக்கையில் பயணிகளை ஏமாற்றி இல்லாத சுங்கச் சாவடிக்கு கட்டணம் போக்குவரத்து கழகத்தினர் வசூலிக்கின்றனர்.

ஒரு நாளைக்கு பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்லும் இந்த வழித்தடத்தில் ஒரு பயணிக்கு ஒன்பது ரூபாய் கூடுதல் என்றால், ஒரு நாளைக்கு லட்சக் கணக்கில் மோசடி நடைபெறுவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். எனவே தமிழக அரசு இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.