காவிரி - வைகை - குண்டாறை இணைப்புத் திட்டத்திற்காக முதல்கட்டமாக 3,440 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
காவிரி-அக்னியாறு-தெற்கு வெள்ளாறு-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று கடந்த 2008ல் தமிழக அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்தை தமிழக அரசு தற்போது செயல்படுத்தவுள்ளது. தேசிய நீர் மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் 7,677 கோடியில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்துக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கேட்டு தமிழக அரசு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கடந்தவாரம் தெரிவித்து இருந்தார்.
இந்த திட்டத்திற்காக முதல்கட்டமாக 3,440 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு கையகப்படுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்திற்கு மொத்தம் 6,730 ஏக்கர் நிலம் தேவைப்படும் என கூறப்படுகிறது. கையகப்படுத்தப்பட்ட இடத்தின் வழியாக கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த கால்வாயின் மூலம் விநாடிக்கு 6,000 கனஅடி நீரை கொண்டு செல்லலாம் எனப்படுகிறது.
இந்த கால்வாய் கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் மாவட்டங்கள் வழியாக 250 கி.மீ வரை செல்லவுள்ளது. இதற்காக கரூர் மாவட்டம் மாயணூர் கிராமத்தின் அருகே காவேரியின் குறுக்கே தடுப்பணை கட்டப்படவுள்ளது.
இந்த கால்வாய் மூலம் அக்னியாறு, வெள்ளாறு, மணிமுத்தாறு, வைகை மற்றும் குண்டாறு ஆகியவற்றின் வெள்ளநீர் மற்றும் காவிரி உபரி நீர் ஆகியவற்றை சேமிக்க முடியும். தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் இப்பணிகள் நடைபெறவுள்ளது. இதன்மூலம் மொத்தம் 20,249 ஹெக்டர் விவசாய நிலம் பயன் அடையும் எனப்படுகிறது.