தமிழ்நாடு

மதுபோதையில் மாணவர்களை தாக்கிய தமிழாசிரியர்... புகாரளிக்க சென்ற பெற்றோர் மீதும் தாக்குதல்

webteam

திருப்பத்தூரில் மது போதையில் பள்ளியில் சுற்றித்திரிந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரசுப் பள்ளியை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருபவர் இளவரசன். இவர் கடந்த சில மாதங்களாக பள்ளியில் சரிவர மாணவர்களுக்கு பாடம் நடத்தாமல் பள்ளியில் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் பலமுறை தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் ஆசிரியர் இளவரசன், மது போதையில் எட்டாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களை சரிவர படிக்கவில்லை எனக் கூறி அடித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அம்மாணவர்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பெற்றோர்கள் தலைமையாசிரியரிடம் இதுகுறித்து புகார் தெரிவிக்க சென்றுள்ளனர். அப்போது தலைமையாசிரியர் இல்லாததால் ஆசிரியர் இளவரசன், எதற்காக பள்ளிக்கு வந்தீர்கள் என பெற்றோரை திட்டியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆவேசமடைந்த பெற்றோர் மற்றும் கிராம மக்கள் இளவரசன் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி பள்ளி எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த நாட்றம்பள்ளி போலீசார் மற்றும் பஞ்சாயத்து தலைவர் ராமன் விஏஓ சிவன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இது குறித்து அதிகாரிகளிடம் கூறி தகுந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.