தமிழ்நாடு

"40 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி.. கரும்பு விவசாயிகளை ஏமாற்றிவிடாதீர்கள்” - சீமான் கோரிக்கை

webteam

விவசாயிகளிடம் இருந்து கரும்பை கொள்முதல் செய்து மக்களுக்கு அரசு வழங்கவேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

அரியலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பிரான்சிசு ஒயிட் எல்லீசு நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று நூலை வெளியிட்டார்.

நூல் வெளியீட்டுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், "பொங்கல் கரும்பை அரசு வாங்கி விநியோகம் செய்யும் என்ற நம்பிக்கையில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்து விவசாயிகள் காத்திருக்கின்றனர். கரும்பு இல்லை என்று அரசு கூறியதால் விவசாயிகளின் நிலைமை என்ன ஆகிறது. அரசு விவசாயிகளிடமிருந்து கரும்பை கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு பொங்கல் பண்டிகளுக்கு தர வேண்டும். இது இலவசம் என கூறுவதற்கு இது என்ன ஸ்டாலின் பரம்பரை சொத்தா? இது யார் சொத்து, யார் பணம். இது மக்கள் பணம் எனவே இதனை இலவசம் என கூறக்கூடாது” என்று பேசினார்.

மேலும், ”கேளிக்கைகளிளும் பொழுது போக்குகளிலும் அதிக நாட்டம் கொண்ட ஒரு இனத்தின் மக்களை புரட்சிக்கு தயார் செய்ய முடியாது. இதுதான் உலகம் முழுவதும் உள்ளது. இந்த நிலையில் பொங்கல் பண்டிகையின்‌ போது தமிழ் சினிமாவிற்கு ஒரே நாளில் 34 கோடி வசூல் கொட்டியிருக்கும் நிலையில் 50 நாட்களுக்கு எவ்வளவு வசூல் ஆகும் என்று பாருங்கள். இதற்கு தான், இலவசம் எதற்கு என்ற கேள்வி எப்போதும் எனக்கு எழுகிறது” எனவும் அவர் கூறினார்.