பள்ளிகள் திறந்து இரண்டு மாதங்கள் ஆகியுள்ள நிலையில் மாணவர்களுக்கு இன்னும் இலவச சீருடை வந்துசேரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் கடந்த ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறந்து கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் முடிவடைய உள்ள நிலையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இன்னும் இலவச சீருடை வந்து சேரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் மாணவ- மாணவியருக்கு இலவச சீருடை வழங்கப்படுகிறது. பள்ளி தொடங்கிய இரண்டு வாரத்திற்குள் ஒரு மாணவருக்கு இரண்டு செட் சீருடையும், குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பின்னர் மேலும் இரண்டு செட் சீருடைகள் வழங்கப்படும்.
ஆனால் இந்தாண்டு இதுவரை சீருடை வந்துசேரவில்லை எனப் புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆசியர்கள் கூறும்போது, “ மாணவ மாணவியருக்கு இன்னும் முழுமையாக சீருடைகள் வந்துசேரவில்லை. இதனால் மாணவர்கள் சீருடை இல்லாத பிற உடைகள் அணிந்து வர வேண்டிய உள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய நிறைய மாணவர்கள் அரசுப் பள்ளியில் படிக்கிறார்கள். அவர்கள் தினசரி உடை இல்லாமல் கிழிந்த ஆடைகளை அணிந்து வருகின்றனர்.
சீருடை இல்லாத காரணத்தினால் பேருந்தில் பஸ் பாஸ் காட்டும்போது பல சிரமங்களை அவர்கள் சந்திக்கின்றனர். இதுபோன்ற பிரச்னைகளால் மனஉளைச்சல் ஏற்பட்டு அவர்களின் படிப்பு கவனமும் சிதறும். எனவே மாணவ- மாணவியருக்கு இலவச சீருடை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.