தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்க சொந்த முயற்சியில் ஆய்வகம் அமைத்த ஆசிரியர்!

JustinDurai

அரசு பள்ளி மாணவர்களின் ஆங்கில அறிவு திறனை மேம்படுத்த தனது சொந்த முயற்சியில் உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய ஆங்கில ஆய்வகத்தை அமைத்துள்ளார் அரசுப் பள்ளி ஆசிரியர் அக்பர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர் கோட்டையில் உள்ளது அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. ஆறாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை உள்ள இந்தப் பள்ளியில் 1,200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும்திறன் மற்றும் எழுத்துத்திறன் குறைவாகவே இருந்ததை அறிந்த அப்பள்ளியில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர் அக்பர், தன்னுடன் 1977ஆம் ஆண்டு  திருக்கோவிலூர் தனியார் பள்ளியில் பயின்ற நண்பர்கள் மற்றும் அவரது மாணவர்களிடம் உதவி கேட்டு அவர்களிடம் நிதி திரட்டி 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப கம்ப்யூட்டர், ப்ரொஜெக்டர், மொழி மாற்றம் செய்யும் அதிநவீன கருவி உள்ளிட்ட உபகரணங்களை வாங்கி உயர் தொழில்நுட்ப ஆங்கில ஆய்வகத்தை அமைத்துள்ளார்.

மாணவர்கள் குழுவாக ஆய்வகத்துக்கு சென்று தங்கள் ஆங்கில அறிவுத்திறனை மேம்படுத்திக்கொள்ள அதிநவீன கருவியுடன் பேசியும் எழுதியும் புத்துணர்ச்சியுடன் பயிற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி ஆய்வகத்தை திறந்துவைத்து மாணவர்களிடையே பேசுகையில், மாணவர்களுக்காக ஹைடெக் ஆங்கில ஆய்வகத்தை அமைத்த ஆங்கில ஆசிரியர் அக்பருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொண்டு கூர்மை சிந்தனையோடு ஆங்கிலத்தில் பேசவும் எழுதவும் கற்றுக் கொள்ளவும் வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அரசுப்பள்ளியில் பயிலும்  மாணவர்களுக்கு ஆங்கில மொழித் திறனை மேம்படுத்த தன்னுடைய நண்பர்கள் மற்றும் பழைய மாணவர்களிடம் கடும் முயற்சியினால் நிதி திரட்டி, தான் பணியாற்றும் பள்ளியில் உயர் தொழில்நுட்ப ஆங்கில ஆய்வகத்தை அமைத்து மற்ற பள்ளிகளுக்கு உதாரணமாக திகழ்ந்த ஆங்கில ஆசிரியர் அக்பருக்கு  அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் அவரை பாராட்டி வருகின்றனர்.

இதையும் படிக்கலாம்: சாலையின் குறுக்கே தொங்கிய கேபிள் - போக்குவரத்தை சீர்செய்த சிறுவர்களை பாராட்டிய டிஎஸ்பி