சிவகங்கையில் அபாய நிலையில் உள்ள பள்ளிக் கட்டடத்தில் அச்சத்துடன் மாணவர்கள் தினந்தோறும் படித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பேயன்பட்டி கிராமத்தில் அரசுப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளியின் கட்டடம் மிகுந்த சேதம் அடைந்து, எப்பொழுது வேண்டுமானாலும் விழும் சூழ்நிலையில் உள்ளது. இதனால் படிக்கும் மாணவர்கள் அச்சத்துடன் தினந்தோறும் இருக்கின்றனர்.
அத்துடன் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் தரைத்தளம் இடிந்து போயுள்ளது. இதனால் தரையில் அமர்ந்து படிப்பதற்கு பதிலாக மாணவர்கள் மண்ணில் அமர்ந்து படிக்கின்றனர். இந்த பள்ளிக்கட்டடத்தை உடனே சீரமைக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் பள்ளிக் கட்டடம் இடிந்து விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் கேட்டபோது, பள்ளியை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.