தமிழ்நாடு

கொரோனா: பிசிஆர் பரிசோதனை செய்ய எஸ்ஆர்எம் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு அனுமதி

webteam

கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறியும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவ அறிவியல் நிறுவனத்திற்கு ஐசிஎம்ஆர் அனுமதி கிடைத்துள்ளது.

 வடபழனியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் கடந்த 2 மாதமாகவே பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள், கொரோனா அறிகுறிகள் இருப்போருக்கு எடுக்கப்பட்டு வருகின்றன. இவை மற்ற ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் இதுவரை பெறப்பட்டு வந்தன. இந்த நிலையில் ஐசிஎம் ஆர் அனுமதி கிடைத்துள்ளதால் இனி இங்கேயே ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என தமிழக சுகாதாரத்துறையின் செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

 நவீன கட்டமைப்பு, அதி நவீன எந்திரங்கள் என ஆய்விற்கான தயார் நிலையில் இருப்பதாகவும், வெளி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிசிஆர் கிட்டுகளை பயன்படுத்தி விரைவில் பரிசோதனைகள் இங்கு தொடங்கப்படும் எனவும் எஸ்ஆர்எம் ஆய்வகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள ஐசிஎம்ஆர் விதித்துள்ள கட்டணப்படி ரூ.3000 ரூபாய் வசூலிக்கப்படும்.

தமிழகத்தில் இதுவரை 94 ஆய்வகங்கள் இருந்தன. 95 ஆவதாக எஸ்ஆர்எம் ஆய்வகம் அனுமதி பெற்றுள்ளது. தற்போது தமிழ்நாட்டில் 49 அரசு ஆய்வகங்கள் மற்றும் 46 தனியார் ஆய்வகங்களும் உள்ளன. இவற்றின் மூலம் சராசரியாக 33000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் பரிசோதனை மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சுகாதாரத்துறை தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.