தமிழ்நாடு

முன்னாள் கவுன்சிலர் -பேருந்து ஓட்டுநர் நடுரோட்டில் அடிதடி: பொதுமக்கள் அவதி

webteam

சென்னை சிட்லப்பாக்கதில் மாநகர் பேருந்து ஓட்டுநரும் திமுக முன்னாள் கவுன்சிலரும் தாக்கிக்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை சிட்லப்பாக்கம் அருகே உள்ள குமரகுன்றம் பகுதி வழியாக குரோம்பேட்டையிருந்து நெமிலிச்சேரிக்கு மாநகரப் போக்குவரத்துக்கழகம் சார்பில் மினி பேருந்து ( தடம் எண் S4 )  இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல அவ்வழியாக சென்ற மினி பேருந்து சாலையோரம் நிறுத்தி இருந்த திமுக பிரமுகரின் இருசக்கர வாகனத்தின் மீது உரசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர், ’பேருந்தை பார்த்து ஓட்ட மாட்டாயா?’ என கேட்டுள்ளார். பேருந்தை நிறுத்திய ஓட்டுநர் வீரராகவன்(50) அந்த நபரை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதானல் ஆத்திரமடைந்த திமுக பிரமுகர் பேருந்து ஓட்டுநரை தாக்கியுள்ளார். 

இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் இயங்கி வந்த 5 மினி பேருந்துகளை நிறுத்திய மாநகரப் பேருந்து ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள். 

மேலும் அந்த ஓட்டுநர் திமுக பிரமுகர் சதிஷ் என்பவரின் சட்டையை கிழித்து அடித்து விட்டார். இச்சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாடு அறைக்கு தகவல் வந்ததையடுத்து அப்பகுதிக்கு கால்துறையினர் விரைந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைத்த காவலர்கள் அங்கு குவிந்திருந்த திமுக பிரமுகர்களையும், மாநகரப் பேருந்து ஓட்டுநரையும் காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.இதுகுறித்து இரு தரப்பினரிடமும் புகாரை பெற்ற சிட்லப்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.