அரியலூரில் கல்லூரி நேரத்தில் நிற்காமல் சென்ற பேருந்தின் கண்ணாடியை கட்டையால் அடித்து மாணவர்கள் உடைத்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சிலால் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் மாணவ-மாணவிகள் கும்பகோணத்தில் உள்ள கல்லூரிகளில் படித்து வருகின்றனா். இவா்கள் கல்லூரிக்கு சென்று வர காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகள் குறைந்த அளவே இயக்கப்பட்டாலும், அவைகளும் சரிவர வருவது இல்லை என குறைகூறுகின்றனர். இதனால் கல்லூரிகளுக்கு செல்ல தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இன்று காலை சிலால் கிராமத்திற்கு கல்லூரி நேரத்தில் பேருந்து எதுவும் வரவில்லை எனப்படுகிறது. நீண்ட நேரத்திற்கு பின்னர் வந்த அரசு பேருந்தும் நிற்காமல் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சாலையில் கிடைந்த கட்டையை தூக்கி பேருந்தின் பின் கண்ணாடியை உடைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனா். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் மாணவா்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மற்றொரு பேருந்தில் கல்லூரிக்கு அனுப்பிவைத்தனர். பேருந்தில் உடைக்கப்பட்ட கண்ணாடிக்கு பதிலாக, புது கண்ணாடியை வாங்கி தருவதாக கிராம மக்கள் ஏற்றுக்கொண்டனா்.