சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாரதியாரின் பிறந்தநாள் விழா மற்றும் பாரதிய மொழிகள் தின விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களை கவுரவித்தார். பின்னர் மகாகவி பாரதியார் தமிழ் மொழி வளர்ச்சிக்காக ஆற்றிய பங்கையும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆங்கிலேயர்கள் நமது மொழியை கொலை செய்ய நினைத்த போது, பாரதியார் தாய்மொழி குறித்து நாடு முழுவதும் பிரசாரம் மேற்கொண்டார். பிரிட்டீஷ் அரசாங்கம் நம் மொழிகளை அடிமைகளின் மொழி என குறிப்பிட்டது. இதனை கண்டித்து செய்தி ஊடகஙகளுக்கு கடிதம் எழுதிய பாரதி தமிழ்தான் சிறந்த மொழி என ஆதாரங்களுடன் நிரூபித்தார்.
தமிழ்நாடு மெட்ராஸ் மாகாணமாக இருந்தபோது, தொடக்கப் பள்ளிகளில் தாய்மொழியுடன் சமஸ்கிருதமும் கற்றுக்கொடுக்கப்பட்டது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாய்மொழிக்கு அடுத்து சமஸ்கிருதம் படிக்கப்பட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக மொழி ரீதியாக இந்திய மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால், அதுவே மொழி பிரிவினைவாதத்துக்கு வழிவகுத்துவிட்டது.
1700 களில் கிழக்கிந்திய கம்பெனி தலைவருக்கு, இங்கிலாந்தில் இருந்து ‘இந்தியாவில் உள்ள இந்துக்களின் இலக்கிய, எழுத்துகளை, சிந்தனைகளை, வரலாற்றை சேகரித்து மொழிபெய்ப்பு செய்யுங்கள்’ என உத்தரவு வந்தது. என்றால், நம்மிடம் உள்ள இதிகாசங்கள் மூலம் அறிவை வளர்க்கமுடியும் என அவர்களுக்கு தெரிந்திருக்கிறது.
இந்தியாவில் நடத்தப்பட்ட ஜி20 மாநாட்டில், இதுவரை இடம்பெறாத ஆப்பிரிக்க நாடுகளையும் சேர்த்தது இந்தியா. யாரையும் தனியாக விட்டுவிடக்கூடாது என்பது நம் கலாச்சாரத்துடன் ஒன்றியது. அதனால்தான் வாசுதேவ குடும்பகம் என ஜி20 மாநாட்டிற்கு பெயர் வைத்து நடத்தினோம். ஒரு நாடு அழிந்து, நம் நாடு வளர வேண்டும் என்பது நம் எண்ணம் அல்ல. அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒரு எதிர்காலத்தை நோக்கி பயணிக்கவேண்டும் என்பதனாலேயே யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தத்துவார்த்தத்தை அடிப்படையாகக் கொண்டு நம் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது.
இங்குள்ளர் சிலர் நமது தமிழ் மொழியின் பழங்கால இலக்கியங்களை நேற்று வந்த ஆங்கில இலக்கியவாதிகள் ஷேக்ஸ்பியர் உள்ளிட்டோருடன் ஒப்பிடுவது எனக்கு சங்கடமாக உள்ளது. இந்தியாவின் வளர்ச்சியை, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இருந்துகொண்டு சில சக்திகள் வலுவிழக்க செய்ய வேண்டும் என முயற்சிக்கின்றன.
இந்தியாவிற்கு எதிரான நாடுகள், வெளிநாட்டு மிஷினரிஸ், ஜிகாதிஸ் நம் நாட்டில் பிரச்னை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். இதற்காக நம் நாட்டில் பொய்களை கட்டமைத்து வருகின்றனர். எதிர்த்து சண்டையிடுவதை விட குழப்பத்தை ஏற்படுத்துவதன் மூலமாக பலன் அடைந்து வருக்கின்றனர். சில நேரம், இந்திய அரசியல் அமைப்பிற்கு ஆபத்து என்பர், சில நேரத்தில் தேர்தல் ஆணையத்தின் மீது சந்தேகத்தை எழுப்புவர். பின் அரசு அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என சொல்லுவார்கள்..
தற்போது ராஜ்ய சபா தலைவர் மீது நம்பிக்கை இல்லை என சொல்கின்றனர். நாட்டின் வளர்ச்சியை தடுப்பதற்கும் மட்டுப்படுத்துவதற்குமான முயற்சி இது. இதெல்லாம் பழைய யுக்திகள் என்பதை மக்கள் அறிவார்கள். பாரதியின் படை வீரர்களான நாம் இந்த யுக்திகளை முறியடித்து நாட்டை வலுப்படுத்துவோம். பாரதியின் கனவே நமது கனவு” என்றார்.