RN Ravi
RN Ravi pt web
தமிழ்நாடு

“நீட் விலக்கு மசோதாவிற்கு கையெழுத்திட மாட்டேன்” - ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்

Angeshwar G

எண்ணித்துணிக எனும் தலைப்பில் பல்வேறு தேர்வு எழுதும் மாணவர்களை அவ்வபோது சந்தித்து வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அந்தவகையில் இந்த ஆண்டு நீட் இளநிலைத் தேர்வில் 600 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற சுமார் 100 மாணவர்களை இன்று ஆளுநர் மாளிகையில் இருக்கக்கூடிய பாரதியார் மண்டபத்திற்கு அழைத்து சந்தித்தார் ஆளுநர்.

RN Ravi, file image

இதற்கு முன் பலமுறை எண்ணித்துணிக நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடந்திருந்தாலும், இன்றுதான் முதன்முறையாக நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் அதிலும் குறிப்பாக அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள் பெற்ற முதல் மதிப்பெண்ணே 569 தான் என்பதினால் இந்நிகழ்ச்சியில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட சேலத்தை சேர்ந்த மாணவர் ஒருவரது தந்தை ஆளுநரிடம் “எங்கள் பிள்ளைகள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். இருந்தாலும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என தொடர்ந்து கேட்டு வருகிறோம். அந்த விலக்கை எப்போது கொடுப்பீர்கள்?” என கேட்டார்.

நீட் தேர்வு

இதற்கு பதில் அளித்து பேசிய ஆளுநர் நீட், “நீட் விலக்கு மசோதாவிற்கு ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திடமாட்டேன். பொதுப்பட்டியலில் இருப்பதினால் மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. நீட் தேர்வை பொறுத்தவரை கோச்சிங் சென்று தான் அதில் வெற்றி பெற வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நன்றாக படித்தால் பள்ளிக்கல்வி வைத்தே நீட் தேர்வில் வெற்றி பெறலாம். ஒவ்வொரு முறையும் 'நீட் தேர்வில் இருந்து விலக்கு கொடுக்க வேண்டும்' என கேட்பது மாணவர்களின் திறனை கேள்விக்குள்ளாக்கும்.

நீட் தேர்வுக்கு முன் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெறுவது என்பது ஒவ்வொரு வருடமும் குறைவாகத்தான் இருக்கும். நீட் தேர்வுக்கு பிறகு தான் ஒவ்வொரு ஆண்டும் அதிகமான இடங்களை மாணவர்கள் பெற்றுள்ளனர்” என்றார்.