2026 ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி pt
தமிழ்நாடு

ஆளுநர் உரையை புறக்கணித்த ஆர்.என்.ரவி.. 13 காரணங்களை அடுக்கிய ஆளுநர் மாளிகை!

நடப்பு 2026 ஆண்டுக்கான முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், தேசிய கீதம் இசைக்கப்படவில்லை, பேச அனுமதிக்கப்படவில்லை என்ற பல்வேறு காரணங்களை சுட்டிக்காட்டி ஆளுநர் ஆர்.எர்.ரவி வெளிநடப்பு செய்துள்ளார்.

Rishan Vengai

ஆளுநர் ஆர்.என்.ரவி, சட்டப்பேரவையில் உரையாற்றுவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்ற காரணத்தால் வெளிநடப்பு செய்தார். ஆளுநர் மாளிகை 13 காரணங்களை அடக்கிய அறிக்கையில், ஆளுநரின் உரையில் ஆதாரமற்ற கூற்றுகள், பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் பிரச்சினைகள் உள்ளிட்ட பல முக்கிய பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் செவ்வாய்க்கிழமையான இன்று தொடங்கும் என கூறப்பட்டது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கு கொள்வதற்காக வருகைதந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பேண்டு வாத்தியம் முழங்க காவல் துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் ஆளுநர் ரவிக்கு பூங்கொத்து கொடுத்து சபாநாயகர் அப்பாவு வரவேற்றார்.

கடந்த முறையே சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் ரவி, தனது உரையை முழுமையாக நிகழ்த்தவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்த நிலையில், தற்போது அவரின் முடிவு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்தது.

இந்தசூழலில் தான் ஆளுநர் உரையை படிப்பதற்கு முன்பாகவே தேசிய கீதம் இசைக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி வெளிநடப்பு செய்துள்ளார். ஆளுநர் ஏன் வெளிநடப்பு செய்தார் என்பதற்கான விளக்கத்தையும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.

தமிழக அரசு உரையில் முறண்பாடான கூற்றுகள்.. 

ஆளுநர் ஆர்.என்.ரவி ஏன் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்து வெளிநடப்பு செய்தார் என்பதற்கான காரணங்களாக 13 பாய்ண்ட்கள் அடங்கிய மிகப்பெரிய பட்டியலை வெளியிட்டுள்ளது ஆளுநர் மாளிகை.

ஆளுநர் மாளிகையில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “

1. ஆளுநரின் மைக் மீண்டும் மீண்டும் அணைக்கப்பட்டு அவருக்குப் பேச அனுமதி மறுக்கப்பட்டது.

2. உரையில் ஏராளமான ஆதாரமற்ற கூற்றுகள் மற்றும் தவறான அறிக்கைகள் உள்ளன. மக்கள் சந்தித்துவரும் பல முக்கியமான பிரச்சினைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

3. மாநிலம் 12 லட்சம் கோடிக்கு மேல் பெரிய முதலீடுகளை ஈர்த்ததாகக் கூறுவது உண்மைக்கு மாறாக உள்ளது. முதலீட்டாளர்களுடனான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகிதத்தில் மட்டுமே உள்ளன. உண்மையான முதலீடு என்பது அதில் ஒரு பகுதிகூட இல்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை, வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் இருந்த நிலையில், தற்போது ஆறாவது இடத்தில் இருக்க போராடி வருகிறது.

4. பெண்கள் பாதுகாப்பு பிரச்சினை முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது, போக்சோ பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் 55 சதவீதத்திற்கு அதிகமாகவும், பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் 33 சதவீதத்திற்கு அதிகமாகவும் உயர்ந்துள்ளது.

5. போதைப்பொருட்களின் பரவலானது பள்ளி மாணவர்கள் உட்பட இளைஞர்களிடையே அதிகரித்து வருவது மிகவும் கவலையளிக்கிறது. ஒரு வருடத்தில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் போதைப்பொருள் பயன்பாட்டால் தற்கொலை செய்து கொண்டனர். இது நமது எதிர்காலத்தை கடுமையாக பாதிக்கிறது. இது சாதாரணமாக புறக்கணிக்கப்படுகிறது.

6. பட்டியலின மக்களுக்கு எதிரான அட்டூழியங்கள் மற்றும் பட்டியலின பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. இருப்பினும் அது முற்றிலும் புறக்கணிக்கப்படுகிறது.

7.நமது மாநிலத்தில் ஒரு வருடத்தில் சுமார் 20,000 பேர் தற்கொலை செய்து கொண்டனர், ஒருநாளில் கிட்டத்தட்ட 65 தற்கொலைகள் அரங்கேறுகின்றன. நாட்டில் வேறு எங்கும் நிலைமை இவ்வளவு கவலையளிக்கவில்லை. தமிழ்நாடு இந்தியாவின் தற்கொலை தலைநகரம் என்று அறியப்படுகிறது. ஆனால் தமிழக அரசு அதுகுறித்து கவலை அடைவதாக தெரியவில்லை. இந்த பிரச்னையும் புறக்கணிக்கப்படுகிறது.

8. கல்வி நிறுவனங்களில் கல்வித் தரம் இல்லாதததும், தவறான நிர்வாகமும் நமது இளைஞர்களின் எதிர்காலத்தை மோசமாக பாதிக்கிறது. 50%-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக காலியாக உள்ளன. நமது இளைஞர்களின் எதிர்காலம் நிச்சயமற்றதாக இருக்கிறது.

9. பல ஆயிரம் கிராம பஞ்சாயத்துகள் பல ஆண்டுகளாக தேர்தல்கள் நடத்தப்படாததால் செயலிழந்துள்ளன. அவை நேரடியாக அரசாங்கத்தின் சிறப்பு அதிகாரிகளின் கீழ் உள்ளன. இதன்மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இது அரசியலமைப்பின் எழுத்து மற்றும் ஆன்மாவுக்கு எதிரானது. கிராம பஞ்சாயத்துகளை மீட்டெடுப்பதற்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஆனால் அரசு உரையில் அதுகுறித்த ஒரு குறிப்பைக் கூட காணவில்லை.

10. மாநிலத்தில் உள்ள பல ஆயிரம் கோயில்கள் அறங்காவலர் குழு இல்லாமல் உள்ளன, மேலும் அவை மாநில அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படுகின்றன. கோயில்களின் தவறான நிர்வாகத்தால் மில்லியன் கணக்கான பக்தர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் விரக்தியடைந்துள்ளனர். பழங்கால கோயில்களின் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் முக்கிய உத்தரவுகள் 5 ஆண்டுகளுக்குப் பிறகும் செயல்படுத்தப்படவில்லை.

11. தொழில்துறையை நடத்துவதற்கான நேரடி மற்றும் மறைமுக செலவுகள் காரணமாக MSME துறைகள் பெரும் மன அழுத்தத்தில் இருந்துவருகின்றன. அவை வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கு முக்கியமான துறையாகும். இருப்பினும், நாட்டில் பதிவுசெய்யப்பட்ட 55 மில்லியனுக்கும் அதிகமான MSME-களுடன் ஒப்பிடும்போது, ​​தமிழ்நாட்டில் வளர்ச்சிக்கான மகத்தான ஆற்றல் இருந்தபோதிலும் சுமார் 4 மில்லியனாக மட்டுமே உள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்முனைவோர் தங்கள் நிறுவனங்களை மற்ற மாநிலங்களில் தேடவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இந்தப் பிரச்சினையும் புறக்கணிக்கப்படுகிறது.

12. மாநிலத்தில் உள்ள அனைத்துத் துறைகளிலும் கீழ்நிலை ஊழியர்களிடையே பரவலான அதிருப்தி உள்ளது. அவர்கள் பதட்டமாகவும் விரக்தியுடனும் உள்ளனர். அவர்களின் உண்மையான குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிகள் அரசு உரையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

13. தேசிய கீதம் மீண்டும் அவமதிக்கப்படுகிறது, அடிப்படை அரசியலமைப்பு கடமை அலட்சியப்படுத்தப்படுகிறது’ என பல்வேறு காரணங்களை அடுக்கியுள்ளது ஆளுநர் மாளிகை.

ஆளுநர் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்த நிலையில், முதல்வரின் தீர்மானத்தால் ஏற்கப்பட்ட ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து உரை வெளியிடப்பட்டது.