அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பெங்களூருவைச் சேர்ந்த ஐஐஎஸ்சி முன்னாள் பேராசிரியர் சூரப்பாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த 5-ம் தேதி நியமனம் செய்து உத்தரவிட்டார். இதனிடையே அண்ணா பகல்லைக்கழக துணைவேந்தராக வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கல்வியாளர்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவியது. அரசு தரப்பிலோ, துணைவேந்தர் நியமனம் என்பது ஆளுநர் சம்பந்தப்பட்டது. அதில் அரசு தலையிட முடியாது என தெரிவித்துவிட்டது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் எம்.கே.சூரப்பா நியமிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.
அதில் துணைவேந்தர் நியமனம் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையாகவும் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், பேராசிரியர்கள் நலன் கருதியே துணை வேந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் தலையீடு ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. துணைவேந்தர் நியமனம் விதிகளின்படியே நடைபெற்றுள்ளதால் அதனை அரசியலாக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தேடல் குழு பரிந்துரைத்த 3 பேரில் ஒருவர் தான் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.