அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பாவை விசாரிக்க தமிழக அரசு குழு அமைத்ததற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீது கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய் நிதி மோசடி புகார் வந்துள்ளதாகவும் அதை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைப்பதாகவும் கடந்த மாதம் உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா தெரிவித்திருந்தார். இந்த குழுவில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகளும் உள்ளனர். இந்த குழு ஏற்கெனவே அம்.ஆர்.சி நகரில் அலுவலகம் அமைத்து ஏராளமானோரை விசாரித்து வருகிறது.
இந்நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த வாரம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் ஒன்றை எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், அனைத்து பல்கலை கழகங்களுக்கும் வேந்தராக இருப்பதாகவும் கடந்த 2018 ஆம் ஆண்டு நன்னடத்தை காரணமாகவே சூரப்பாவை துணைவேந்தராக நியமித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தனக்கு தெரியாமல் இதுபோன்ற குழு அமைத்தது வருத்தம் அளிப்பதாகவும் ஆளுநர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கடிதம் குறித்து தலைமை செயலக வட்டாரங்களும் உறுதிபடுத்தியுள்ளன. அதேபோல் ஆளுநர் தரப்பு வட்டாரங்களும் கடிதம் குறித்து உறுதிபடுத்தியுள்ளன. சூரப்பா மீதான விசாரணையை விரைவில் முடித்துக்கொள்ள வேண்டும் எனவும் ஆளுநர் வலியுறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.