தமிழ்நாடு

சட்டப்பேரவை நிகழ்வுகள்.. ஆளுநர் விளக்க அறிக்கை கேட்பு

சட்டப்பேரவை நிகழ்வுகள்.. ஆளுநர் விளக்க அறிக்கை கேட்பு

Rasus

சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவைச் செயலாளரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்க அறிக்கை கோரியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி பெற்றது. முன்னதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கோரி அவையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் அனுமதி மறுத்தார். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதோடு சபாநாயகரின் மைக்கும் உடைக்கப்பட்டது.

பேரவைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சட்டப்பேரவைத் எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், சட்டப் பேரவையில் தங்களை குண்டுகட்டாகத் தூக்கி அடித்து உதைத்து சட்டைகளை கிழித்ததாகவும் குற்றம்சாட்டிருந்தார். மேலும் சட்டப்பேரவையில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து ஸ்டாலின் புகார் அளித்திருந்தார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் ஆளுநர் வித்யாசாகர் ராவை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது, சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஆளுநரிடம் அவர் விளக்கியதாகத் தெரிகிறது. மேலும் நேற்றைய வாக்கெடுப்பை அங்கீகரிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவைச் செயலாளரிடம் ஆளுநர் வித்யாசாகர் ராவ் விளக்க அறிக்கை கோரியுள்ளார்.