வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களும் நடைபெற்று வந்தன.இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது. இந்த நிலையில், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கும் மசோதா சட்டசபையில் கடந்த பிப்ரவரி 26-ம் தேதி அன்று நிறைவேற்றப்பட்டது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. சீர்மரபினருக்கு 7 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்கவும் மசோதா வகை செய்கிறது. எம்பிசி-வி என்ற பிரிவு வன்னியர்களுக்காக ஏற்படுத்தப்பட்டு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க இந்த மசோதா வகை செய்கிறது.
இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவிற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும் சீர்மரபினருக்கு 7%, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்கவும் ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.