வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அதனை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. இதற்காக அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து 75 பணியாளர்கள் பணியாற்றும் வகையில், 24 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வடகிழக்கு பருவமழை தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1913 மூலமும், கட்டுப்பாட்டு அறையில் உள்ள 044-2536 7823, 2538 49, 2538 3694 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும் தெரிவிக்கலாம். மழை காலங்களில் நோய்த் தடுப்பு மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவைகளை இருப்பு வைத்திட பொதுசுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிவாரண மையங்களில் தங்க வைக்கப்படுபவர்களுக்கு ஆவின் பால், குடிநீர், பிரெட் உள்ளிட்டவைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூவம் ஆற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 14,257 வீடுகளில் 825 வீடுகளும், அடையாற்றில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள 9,687 வீடுகளில் 4,134 வீடுகளும் அகற்றப்பட்டு மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. பருவமழையின்போது தாழ்வான பகுதிகளில் இருந்து தண்ணீரை வெளியேற்ற 458 மோட்டார் பம்புகளும், 2 வாகனம் மூலம் மரம் அறுக்கும் நிறுவனங்கள், 160 கையில் எடுத்துச் செல்லக்கூடிய மர அறுவை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 109 மீட்புப் படகுகள், 176 நிவாரண முகாம்கள், 4 பொது சமையல் கூடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மருத்துவ சிகிச்சை அளித்திட 44 நிலையான மற்றும் நடமாடும் மருத்துவக் குழுக்கள், 50 அம்மா குடிநீர் மையங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.