தமிழ்நாடு

ஊத்தங்கரை: மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் திடீர் மயக்கம் - மருத்துவமனையில் அனுமதி

Sinekadhara

ஊத்தங்கரை அருகே மதிய உணவு சாப்பிட்ட பள்ளி மாணவர்கள் திடீரென மயக்கமடைந்தனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சூளகரை அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். இந்நிலையில் இன்று பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சத்துணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் மதிய உணவு வழங்கப்பட்டது. பள்ளியிலுள்ள 115 மாணவர்களில் இன்று மதிய உணவு சாப்பிட்ட 100 பேரில் ஏழு மாணவர்கள் மட்டும் திடீரென்று லேசான மயங்கம் வருகிறது எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதை அறிந்த பள்ளி நிர்வாகம் உடனடியாக பள்ளிக் குழந்தைகளை கல்லாவி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தேசிங்கன், சியாம், கார்ல் மார்க்ஸ், சாரதி, தீபன் ராஜ், தமிழ் இனியன் மற்றும் ஆகாஷ் ஆகிய 7 பேரும் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் பள்ளியின் சமையல் வேலை செய்துவரும் சூளகரை கிராமத்தைக் சேர்ந்த புவனேஸ்வரி என்பவரிடம் பள்ளி நிர்வாகம் மற்றும் காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்.

மாணவர்களுக்கு மயக்கம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்த பெற்றோர்கள், மருத்துவமனைக்கு சென்று தங்கள் குழந்தைகளிடம் நலம் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில் மயக்கமடைந்த அனைவரும் ஆறாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் எனவும், குறிப்பாக அவர்கள் அருகருகே அமர்ந்து படிக்கும் நண்பர்கள் எனவும் தெரியவந்துள்ளது. 

இதில் காரல்மார்க்ஸ் என்ற மாணவன் உணவு ஒவ்வாமையால் சாப்பிட்ட ஒருமணி நேரம் கழித்து வாந்தி எடுத்ததாகவும், அதை அருகேயிருந்து பார்த்த ஆறுபேருக்கும் கொமட்டல் ஏற்பட்டது எனவும் கூறினார்கள். இரண்டு மணி நேர சிகிச்சைக்குப்பிறகு மாணவர்கள் அனைவரும் நலமுடன் இருப்பதாகக் கூறியதையடுத்து வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.