வரும் 10 நாட்களுக்குள் சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதியளித்துள்ளார். கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கிடைப்பதில் உள்ள தட்டுப்பாட்டை போக்கும் விதமாக சேலம் உருக்காலை வளாகத்தில் ஆக்சிஜன் வசதியோடு கூடிய 500 படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையத்தை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடந்த மாதம் திறந்து வைத்தார்.
அப்போது அவர், அதே வளாகத்தில் கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக்கைகளை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி புதிதாக அமைக்கப்பட்ட கூடுதல் சிகிச்சை மையத்தை தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்....
சேலம் மாவட்டத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள 500 படுக்கைகளோடு சேர்த்து 7065 ஆக்சிஜன் வசதிகொண்ட படுக்கைகள் உட்பட 12 ஆயிரத்து 568 படுக்கைகள் உள்ளது. தற்போது மேற்கொள்ளப்படும் தீவிர நடவடிக்கைகள் காரணமாக சேலம் மாவட்டத்தில் 10 நாட்களுக்குள் கொரோனா தொற்று எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆகும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
கொரோனா மூன்றாவது அலை வந்தாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.