கரூர் கூட்ட நெரிசல் விபத்து web
தமிழ்நாடு

கரூர்: அரசு வேலை வழங்கியதை எதிர்த்த வழக்கு.. ஜூலை 24க்குள் பதில் அளிக்க அரசுக்கு உத்தரவு!

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் இறந்தோர் குடும்பத்துக்கு அரசு வேலை வழங்கியதை எதிர்த்த வழக்கில் பதிலளிக்கு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

PT WEB

கரூர் கூட்டநெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டாம் என தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கில், அரசின் பதில்மனு இன்னும் முழுமையடையாததால் நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு ஜூலை 27க்கு விசாரணையை ஒத்திவைத்தது. 31 பேருக்கு நியமன ஆணை வழங்கப்பட்டு 29 பேர் பணியில் சேர்ந்துள்ள நிலையில், அனைத்து நியமனமும் நீதிமன்ற இறுதி முடிவுக்கு உட்பட்டதாகவும் இடைக்கால உத்தரவு தொடரும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

திண்டுக்கல் வேடசந்தூரை சேர்ந்த சந்தோஷ் குமார் மதுரை அமர்வில், கரூர் கூட்டநெரிசல் விபத்தில் உயிரிழந்த 41 பேரின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கும் வகையில் உத்தரவு பிறப்பிக்கவோ, நிர்வாக நடவடிக்கை எடுக்கவோ கூடாது என உத்தரவிடக்கோரி பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், "பதில்மனு முழுவதுமாக தயாராகவில்லை. ஆகவே 3 வழக்குகளையும் சேர்த்து 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. 

அதற்கு நீதிபதிகள், "முதல் மாதம் ஊதியம் பெறுவதற்கு முன்பாக வழக்கை விசாரிக்க வேண்டுமே என தெரிவித்தனர். அரசுத்தரப்பில், "27ஆம் தேதி வழக்கை ஒத்திவைக்க கோரப்பட்டது.

விஜய் பரப்புரை கரூர்

அதையடுத்து நீதிபதிகள் வெள்ளிக்கிழமைக்குள்ளாக பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அரசுத்தரப்பில், "31 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 29பேர் பணியில் சேர்ந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள், "இந்த விவகாரத்தில் அனைத்து நியமனமும் நீதிமன்ற இறுதி முடிவுக்கு உட்பட்டதே, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு தொடரும்" என குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

இன்று தாக்கலான புதிய வழக்கை பொறுத்தவரை மனுதாரர் புதிதாக நிவாரணம் எதையும் கோரவில்லை. ஏற்கனவே உள்ள மனுக்களை காப்பி பேஸ்ட் செய்தது போல உள்ளது. இதுபோல விளம்பர நோக்கத்திற்காக தாக்கல் செய்யப்படும் மனுக்கள் ஏற்கத்தக்கதல்ல என குறிப்பிட்டு இந்த வழக்கையும், பிற வழக்குகளோடு சேர்த்து ஜூலை 27 ஆம் தேதி பிற்பகல் 2.15 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.