தமிழ்நாடு

குடியரசுத் தலைவர் செல்லும் வழியில் விலங்குகள் செல்லாமலிருக்க புதிய நடவடிக்கை

நிவேதா ஜெகராஜா

தமிழகம் வந்துள்ள குடியரசுத் தலைவருக்கு 5 அடுக்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் செல்லும் முக்கிய சாலைகளிலும், இணைப்பு சாலைகளிலும் விலங்கினங்கள் ஏதும் குறுக்கிடாமல் இருக்க, சில முயற்சிகள் எடுக்கப்பட்டன.

அதில் முக்கியமாக நாய் - பூனை - ஆடு - மாடு போன்ற பிராணிகளை தடுக்க, மாநகராட்சி ஊழியர்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் கையில் கட்டையுடன் குடியரசுத் தலைவர் செல்லும் சாலைகளில் பணியில் இன்று ஈடுபட்டிருந்தனர்.

குடியரசுத் தலைவர் விமான நிலையத்திலிருந்து ஆளுநர் மாளிகை செல்லும் வழி, ஆளுநர் மாளிகையில் இருந்து தலைமைச் செயலகம் செல்லும் வழி, மீண்டும் தலைமைச் செயலகத்திலிருந்து ஆளுநர் மாளிகை செல்லும் வழி, ஆளுநர் மாளிகையில் இருந்து விமான நிலையம் செல்லும் வழி - ஆகிய இடங்களில் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

சீன அதிபர் ஜின்பிங் தமிழகம் வந்தபோது து பல அடுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இருந்தபோதும், மகாபலிபுரத்தில் அவர் பிரதமர் மோடியுடன் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், நாயொன்று அப்பகுதியில் சென்றது. அதேபோல ஜின்பிங் திருவான்மியூரில் பயணப்பட்ட நேரத்திலும் நாய் ஒன்று குறுக்கே ஓடியது. இதுபோன்ற சிறு சிறு சம்பவங்கள் மீடியாக்களின் கேமராக்களில் சிக்கின.

மீடியாக்கள் அந்நிகழ்வுகளை சுவாரஸ்யமாகவே காட்டியபோதிலும், அரசு அதை சற்று சீரியஸாகவே பார்த்திருக்கிறது. அதன் வெளிப்பாடாகவே, அந்நிகழ்வை மனதில் கொண்டு, குடியரசுத்தலைவர் வருகையின்போது அதுபோல் ஏதும் ஏற்படக்கூடாது என நினைத்து, முன்னெச்சரிக்கையாக மேற்சொன்ன நடவடிக்கையை மாநகராட்சி எடுக்கிறது என சொல்லப்படுகிறது.

- மாதவன் குருநாதன்