தமிழ்நாடு

நீட் தேர்வை புறந்தள்ள புதிய சட்டம்: குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற தமிழக அரசு நடவடிக்கை

நிவேதா ஜெகராஜா

நீட் தேர்வை புறந்தள்ளுவதற்கு புதிய சட்டத்தை இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது. மருத்துவ சேர்க்கைக்கான தேசிய நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்பு என கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவு தேர்வுக்கு (நீட்) தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதனடிப்படையில் மருத்துவப் படிப்பிற்கான இடங்கள் ஏழை மாணவர்களுக்கு கிடைப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு குழுவொன்றும் அமைக்கப்பட்டது.

அந்த குழு முடிவின் அடிப்படையில், தமிழக அரசு இன்று இந்த கொள்கை விளக்க குறிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் குறிப்பில், ‘நீட் தேர்வை புறந்தள்ள தமிழ்நாடு மாநில சட்டம் 3/2007-னைப் போன்றதொரு புதிய சட்டத்தினை இயற்றி, குடியரசு தலைவர் ஒப்புதலை பெற முயற்சிக்கலாம் என குழு பரிந்துரைத்துள்ளது’ எனக்கூறப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை அரசுதரப்பில் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதனை செய்வதன்மூலம் மருத்துவக் கல்வி சேர்க்கை முறைகளில் பாகுபாடு காட்டப்படுவதை தடுக்கவும், அப்பாகுபாட்டினால் ஒதுக்கப்படும் மற்றும் பாதிக்கப்படும் மாணவச் சமுதாயத்திற்கான சமூக நீதி பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய முடியும் என தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.