தமிழ்நாடு

"குடிபோதை குற்றங்களுக்கு இழப்பீடு தேவை" - நீதிமன்றம்

webteam

குடிபோதையால் நடைபெறும் குற்றங்களில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குடிபோதை தகராறு தொடர்பான வழக்கை‌ விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், மதுக் கொள்கையில் தமிழக அரசு மாற்றங்களை கொண்டுவராவிட்டால், குற்றங்கள் அதிகரிக்கும் எனக் கருத்து தெரிவித்திருந்தது. குற்ற சம்பவங்களுக்கு அரசை பொறுப்பாக்குவது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளதாக தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கு அதிருப்தி தெரிவித்த நீதிபதி, இந்த விவகாரத்தில் தமிழக அரசு நிலையான ஒரு நிலைபாட்டை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார் குடிபோதையால் நடைபெறும் குற்ற சம்பவங்களால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக தனித் திட்டம் வகுக்க வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்து கொள்ளாமல் அரசின் நிலைப்பாட்டை ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.