ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஜாக்டோ ஜியோ அமைப்பு வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவித்துள்ள நிலையில், போராட்டத்தில் பங்கு பெறாமல் பணிக்கு வருபவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககத்தின் தலைமை அலுவலகம் மற்றும் மண்டல அலுவலகங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதால் பணியாளர்கள் அச்சமின்றி பணிக்கு வரலாம் என்று செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்த சுற்றறிக்கையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் நடத்தை விதிகளின்கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினக் கூலி அடிப்படையில் பணியாற்றும் பகுதி நேர ஊழியர்களும், காலமுறை ஊதியம் பெறுபவர்களும் அன்று பணிக்கு வராவிட்டால், அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் பணிக்கு வருபவர்கள் மீது போராட்டத்தில் கலந்து கொள்ளும் சக ஊழியர்கள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.