தமிழ்நாடு

மாடு பிடி வீரர்களுக்கு அரசு வேலை கோரிக்கை - பரிந்துரைப்பதாக அமைச்சர் தகவல்

கலிலுல்லா

சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகிறது. இதுகுறித்து முதலமைச்சரிடம் பரிந்துரை செய்யப்படும் என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி உறுதியளித்துள்ளார்.

தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு, பொங்கல் திருநாளையொட்டி ஒவ்வோர் ஆண்டும் மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் ஆண்டாண்டு காலமாக நடத்தப்பட்டு வருகிறது. வாடிவாசலில் சீறிப் பாயும் காளைகளின் திமிலை தீரத்துடன் தழுவி வெற்றி மாலை சூடும் காளையர்கள், தங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

ஜல்லிக்கட்டு வீரர்களின் கோரிக்கை குறித்து மதுரை மண்ணைச் சேர்ந்த வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தியிடம் கேட்டபோது, முதலமைச்சரிடம் பரிந்துரை செய்யப்படும் என்றும், அவர் முடிவு எடுப்பார் எனவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, ஜல்லிக்கட்டு போட்டிகளில் சில மாடுபிடி வீரர்கள் காயம் அல்லது உயிரிழப்பை சந்திக்கும் நிலையில், தமிழக அரசே அனைத்து வீரர்களுக்கும் காப்பீடு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு நலவாரியம் அமைத்தால்தான் களத்திற்கு காளைகளை கொண்டு வருவது, வீரர்கள் தேர்வு உள்ளிவற்றை சிறப்பாக செய்ய முடியும் என்றும் ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.