Road blocked pt desk
தமிழ்நாடு

வலிப்பு நோயால் துடித்த குழந்தை: அலட்சியமாக செயல்பட்ட மயிலாடுதுறை அரசு மருத்துவர்கள் - நடந்தது என்ன?

மயிலாடுதுறையில் வலிப்பு நோய் வந்த 9 மாத குழந்தைக்கு 4 மணி நேரமாக சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் முன்வராத காரணத்தால் அரசு மருத்துவமனை எதிரே உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

webteam

செய்தியாளர்: மா.ராஜாராம்

மயிலாடுதுறை சேந்தங்குடி பகுதியைச் சேர்ந்தவர்கள் ரத்தினகுமார் - கிருஷ்ணவேணி தம்பதியர். இவர்களின் 9 மாத கைக்குழந்தைக்கு இன்று காலை வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மயிலாடுதுறை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக குழந்தையை தூக்கி சென்றுள்ளனர். காலை ஆறு மணி முதல் 10 மணி வரை நான்கு மணி நேரமாக மருத்துவர்கள் யாரும் மருத்துவம் பார்க்க முன்வராத நிலையில், அதற்குப்பின் அங்கே இருந்த மருத்துவ செவிலியர்கள் வெளியில் சென்று மருந்து வாங்கி வருமாறு ஒரு துண்டு சீட்டில் எழுதிக் கொடுத்துள்ளனர்.

Govt Hospital

இதனால் ஆத்திரமடைந்த ரத்தினகுமார் மற்றும் அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்கள் கலைந்து செல்ல மறுத்ததால் போலீசார் ரத்தினகுமார் மற்றும் அவரது உறவினர்களின் சட்டையைப் பிடித்து மருத்துவமனையின் உள்ளே இழுத்துச் சென்றனர்.

இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே சிறிய தள்ளுமுள்ளு மற்றும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.