மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கைரேகையின் உண்மைத் தன்மை குறித்து அரசு மருத்துவர் பாலாஜி வரும் 27ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு திருப்பரங்குன்றம் இடைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் சரவணன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தம்மை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் ஏ.கே.போஸ்-க்கு கட்சியின் சின்னம் ஒதுக்கக்கோரும் படிவத்தில் இடம் பெற்றிருந்த ஜெயலலிதாவின் கைரேகை உண்மை தானா என்பதை தெளிவுபடுத்தக்கோரி குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பாக, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி ஆகியோர் ஏற்கனவே கடந்த மாதம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதா கைரேகையின் உண்மைத் தன்மை குறித்து அரசு மருத்துவர் பாலாஜி வரும் 27ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவிட்டார். திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின்போது ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததால், சின்னம் ஒதுக்கக்கோரும் படிவத்தில் அரசு மருத்துவர்கள் முன்னிலையில் ஜெயலலிதாவின் கைரேகை பெறப்பட்டதாக அதிமுக தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. மேலும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தான் ஜெயலலிதாவின் கைரேகைக்கு ஒப்புதல் அளித்தார் என்றும் விளக்கமளிக்கப்பட்டது.