தமிழ்நாடு

சென்னையில் அத்தியாவசிய பணியாளர்களுக்காக 200 பேருந்துகள் இயக்கம்

webteam

சென்னையில் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ளோருக்காக 200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

கொரோனாவால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 18 ஆக உள்ள நிலையில் நேற்று மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முன்னதாக, தமிழகத்தில் நேற்று மாலை 6 மணிமுதல் ஏப்ரல் 1ஆம் தேதி காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் நேற்று இரவு பேசிய பிரதமர் மோடி நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தார். அதன்படி தற்போது ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் காய்கறி, மளிகைக் கடைகள், பால், இறைச்சிக் கடைகள் திறந்துள்ளன. மேலும் அத்தியாவசிய பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், சென்னையில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ளோருக்காக 200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது, சென்னையில் அத்தியாவசிய பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், தலைமைச் செயலக அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்களுக்காக 200 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.