பணி இடமாற்ற்ம் கேட்ட ஓட்டுனர் கண்ணன்
பணி இடமாற்ற்ம் கேட்ட ஓட்டுனர் கண்ணன் PT
தமிழ்நாடு

கோவை: திடீரென குழந்தையை காலில் வைத்த அரசுப்பேருந்து ஓட்டுநர் - ஷாக் ஆன அமைச்சர்! பின்னணி இதுதான்!

PT WEB

கோவை ராமநாதபுரம் திருச்சி சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் ஓட்டுநர் / நடத்துநர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறையினை போக்குவரத்துத் துறை அமைச்சர் திறந்து வைத்தார். அத்துடன், பணிக்காலத்தில் இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வாரிசுப் பணி மற்றும் 10 ஆம் வகுப்பு / 12 ஆம் வகுப்புகளில் பணிமனை அளவில் முதல் மூன்று மதிப்பெண்களைப் பெற்ற பணியாளர்களின் குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

அப்போது மேடைக்கு ஆறு மாத குழந்தையுடன் அரசுப் பேருந்து ஓட்டுநர் கண்ணன் என்பவர், அமைச்சர் காலில் குழந்தையை வைத்து பணி மாறுதல் தொடர்பாக கோரிக்கை விடுத்தார். உடனடியாக அமைச்சர், மேயர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் குழந்தையை உடனடியாக கையில் எடுத்தனர்.

இது தொடர்பாக கண்ணனிடம் பேசியபோது தனக்கு ஆறு மாத குழந்தை ஒன்றும், ஆறு வயது குழந்தை ஒன்றும் உள்ளதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு இறந்து விட்டதாகவும் தெரிவித்தார்.

தேனி மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட கண்ணன் இரண்டு பெண் குழந்தைகளையும் தாயின் அரவணைப்பு இல்லாமல் பார்த்துக்கொள்ள முடியவில்லை என வேதனையுடன் தெரிவித்தார். தனது பெற்றோரும் வயது முதிர்ந்து விட்டதால் அவர்களை சொந்த ஊரிலிருந்து கோவைக்கு அழைத்து வர இயலாத சூழல் உள்ளதாகவும், எனவே தனக்கு சொந்த ஊருக்கு பணி மாறுதல் வேண்டியும் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

பலமுறை பொது மேலாளரிடம் பணி மாறுதல் தொடர்பாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாததால் அமைச்சரே இன்று நேரில் பார்த்ததால் குழந்தையுடன் கோரிக்கை வைத்ததாக கூறினார். மேலும் அமைச்சர் பேசி தீர்வு காணப்படும் என தெரிவித்ததாகவும் அவருக்கு கூறினார்.