தமிழ்நாடு

கொரோனா 2-வது அலைக்கு மத்தியில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு அறிவிப்பு!

JustinDurai

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு வழிமுறைகளை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. 

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலின் இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், 12 ஆம் வகுப்பு செய்முறை தேர்வுக்காக 21 வகையான நிலையான வழிமுறைகள் அடங்கிய உத்தரவை அரசு தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. இதன்படி இயற்பியல், வேதியியல், கணிப்பொறியியல், தாவிரவியல், உயிரியல் படிக்கும் மாணவர்களுக்கு ஏப்ரல் 16-ம்  தேதி முதல் செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ளது. 

கொரோனா பரவலை தடுக்க செய்முறை கூடத்தில் கட்டாயம் PIPETTE பயன்படுத்த வேண்டாம்; முகக்கவசம், சமூக இடைவெளி கட்டாயம்;  மாணவர்கள் கிருமிநாசினி சானிட்டைசர் மற்றும் குடிநீர் பாட்டில்கள் தனியாக வைத்துகொள்ளவேண்டும்; சானிடைசர் பயன்படுத்திய பிறகு தீயால் உபயோகிக்கும் பொருட்களை பயன்படுத்துதல் கூடாது; நல்ல காற்றோட்டம் இருப்பதை உறுதிபடுத்த வேண்டும் போன்றவை வழிமுறைகளில் இடம்பெற்றுள்ளது.

செய்முறை தேர்வு வழிமுறை வெளியானதால் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத்தேர்வு நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது.