தமிழ்நாடு

மன்னார்குடி: கோவாக்சின் செலுத்தியவர்களுக்கு கோவிஷீல்டு என குறுந்தகவல் வந்ததால் குழப்பம்

Sinekadhara

மன்னார்குடி அருகே கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பயனாளிகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டதாக குறுஞ்செய்தி வந்ததால் கிராம மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் கிராமம், நகரம் என அனைத்து பகுதிகளை சேர்ந்த மக்களும் சென்று ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொள்கின்றனர். மன்னார்குடி அருகே 54 நெம்மேலி கிராமத்தில் கடந்த 3 ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆண், பெண், முதியவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோவாக்சின் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டனர்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு ஆதாரமாக பயனாளிகள் பெயர், அடையாள அட்டை, செலுத்திக்கொண்ட ஊசியின் பெயர், ஊசி செலுத்தப்பட்ட தேதி, தடுப்பூசி போடப்பட்ட மையத்தின் பெயர் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய குறுஞ்செய்தி பயனாளிகளின் கைப்பேசிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

54 நெம்மேலி கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் கலந்துகொண்ட நூற்றுக்கும் மேற்ப்பட்ட பயனாளிகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால் சுகாதாரத்துறை சார்பில் ஊசி போடப்பட்ட பயனாளிகளுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில் பயனாளிகளுக்கு "கோவிஷீல்டு " தடுப்பூசி செலுத்தப்பட்டதாக வந்துள்ளது. இதனால் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் குழப்பமடைந்துள்ளார்.

பயனாளிகள் செலுத்திக் கொண்டுள்ள ஊசியை வேறொரு ஊசி என மாற்றி தகவல் அனுப்பியுள்ளதால் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தும் போது கோவாக்சின் செலுத்திக்கொண்டுள்ளவர்களுக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. கிராமப் பகுதிகளில் உள்ள முதியோர்களுக்கு போதிய விபரம் தெரியாததால் இரண்டாம் தவணை ஊசி செலுத்திக் கொள்ளும்போது குளறுபடிகள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் 54 நெம்மேலி கிராமத்தில் நடைபெற்ற முகாமில் ஊசி செலுத்திக்கொண்டவர்களில் பலருக்கு குறுஞ்செய்தி வரவில்லை என்றும் கூறப்படுகிறது. கடந்த 3ஆம் தேதி கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அதே மாதம் 14 ஆம் தேதி தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் குறுஞ்செய்தி வந்துள்ளது.

54 நெம்மேலி கிராமத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள அனைவருக்கும் இத்தகைய மாறுபட்ட தகவல்கள் வந்துள்ளது குறித்து திருவாரூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து கிராம மக்களுக்கு சரியான தடுப்பூசியை செலுத்தவேண்டும் என கிராமமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.