பரங்கிமலை கொலை, சென்னை உயர்நீதிமன்றம்
பரங்கிமலை கொலை, சென்னை உயர்நீதிமன்றம் twitter
தமிழ்நாடு

ரயில் முன் தள்ளி பெண் கொலை செய்யப்பட்ட வழக்கு: குற்றம்சாட்டப்பட்டவர் மீதான குண்டர் சட்டம் ரத்து!

PT WEB

சென்னை பரங்கிமலை காவல் குடியிருப்பில் வசித்த கல்லூரி மாணவி சத்யபிரியாவும், அதே குடியிருப்பில் வசித்த சதீஷும் காதலித்தாக சொல்லப்படுகிறது. இதற்கு சத்யபிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், சதீஷுடன் பேசுவதை சத்யபிரியா நிறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதனால் சதீஷ் கடந்த ஆண்டு (2022) அக்டோபர் 13ஆம் தேதி கல்லூரிக்குச் செல்ல பரங்கிமலை ரயில் நிலையம் வந்த சத்யபிரியாவை, ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்தார்.

கொலை செய்யப்பட்ட சத்யபிரியா

இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் நிலையத்தினர் அக்டோபர் 14ஆம் தேதி சதீஷை கைது செய்து, சிறையில் அடைத்த நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி பரிந்துரையின் அடிப்படையில் சதீஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யும்படி நவம்பர் 4ஆம் தேதி சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். தன் மீது பதியபட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சதிஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில், “சட்டவிரோதாமாகவும், அடிப்படை உரிமையை மீறியும், அவசரகதியில் குண்டர் சட்டம் பதியபட்டுள்ளது. குண்டர் சட்டத்தின்கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நகல் முறையாக பிறப்பிக்கப்படவில்லை. இது இயற்கை நீதிக்கு முரணாணது. எனவே சென்னை காவல் ஆணையரின் இயந்திரதனமான உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார்.

chennai high court

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் “ஒரு கொடூரமான சம்பவத்தைச் செய்துள்ள சதீஷுக்கு எந்த நிவாரணமும் வழங்கக்கூடாது” என வாதிடப்பட்டது. இதையடுத்து வழக்கு குறித்து தமிழக அரசு, சென்னை மாநகர காவல் ஆணையர், சிபிசிஐடி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, சதீஷ் தரப்பில், கைது உத்தரவில் செப்டம்பர் 27 என தமிழிலும், அக்டோபர் 13 என ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது, முரணாக இருப்பதாக சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது.

இதற்கு காவல்துறை தரப்பில் போதிய விளக்கம் தராத நிலையில், பரங்கிமலை சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.