தமிழ்நாடு

“ஊக்க மருந்து குறித்த செய்தி முற்றிலும் வதந்தி” - கோமதி சகோதரர் பேட்டி

webteam

ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தார்.

ஆனால் தோஹா தடகளப் போட்டியின் போது எடுக்கப்பட்ட மாதிரிகளை ஊக்கமருந்து சோதனைகளுக்கு உட்படுத்திய போது, கோமதி மாரிமுத்து அதில் தோல்வி அடைந்ததாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது. இதற்கு கோமதி மாரிமுத்து மறுப்பு தெரிவித்திருந்தார். மேலும் என் வாழ்க்கையில் நான் ஊக்க மருந்துகளை பயன்படுத்தியதில்லை எனவும் ஊக்க மருந்து சோதனையில் நான் தோல்வி அடைந்ததாக வெளியான செய்தி தவறு எனவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்நிலையில், ஊக்க மருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி என கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி புதிய தலைமுறைக்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

இந்திய தடகளக் கூட்டமைப்பு இடமிருந்து எங்களுக்கு எவ்வித தகவல்களும் வரவில்லை எனவும் எங்களை அவர்கள் தற்போது வரை தொடர்பு கொள்ளவும் இல்லை எனவும் தெரிவித்தார். மேலும் இது போன்ற செய்திகளை யார் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை எனவும் போலந்தில் நடைபெறும் சாம்பியன்ஷிப் போட்டிக்கு கோமதி தற்போது தயாராகி வருகிறார் எனவும் சுப்ரமணி குறிப்பிட்டுள்ளார்.