திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே பாஜக நிர்வாகி வீட்டில் 400 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
பாஜக பொதுக்குழு உறுப்பினரான ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் மீஞ்சூர் அருகேயுள்ள மேட்டுப்பாளையத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அவரது சகோதரர் மகளுக்கு திருமணம் என்பதால், வெளிநாடுகளில் இருந்து ஜானகிராமனின் மகள், மகன் குடும்பத்தினர் சொந்த ஊர் வந்துள்ளனர். அவர்களது வங்கி லாக்கரில் இருந்த 400 சவரன் நகைகளை திருமண நிகழ்ச்சிக்காக வீட்டிற்கு எடுத்து வந்து வைத்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்றிரவு குடும்பத்தோடு ஜானகிராமன் சென்னைக்கு வந்துள்ளார். இன்று காலை திரும்பியபோது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 400 சவரன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஜானகிராமன் அளித்த புகார் அடிப்படையில் நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் தடயங்களை சேகரித்து வருகின்றனர். கொள்ளையர்களைப் பிடிக்க 3 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன.