தங்கம் விலை குறைவு! pt desk
தமிழ்நாடு

தடாலடியாக சரிந்த தங்கம் விலை 2, 680 ரூபாய் வரை குறைவு - இன்னும் குறையுமா? நிபுணர் சொல்வதென்ன?

சில தினங்களுக்கு முன்பு வரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய ஆபரண தங்கம் விலை, இப்போது தடாலடியாக சரிந்து வருகிறது. இந்த விலை குறைவுக்கு என்ன காரணம்? பார்க்கலாம்...

Uvaram P

சில தினங்களுக்கு முன்பு வரை வரலாற்றில் இல்லாத அளவுக்கு உச்சத்தை எட்டிய ஆபரண தங்கம் விலை, இப்போது தடாலடியாக சரிந்து வருகிறது. கடந்த 4 நாட்களாக பார்த்தால், சவரனுக்கு 2,680 ரூபாய் வரை குறைந்திருப்பது நகை பிரியர்களை பெருமூச்சு விட வைத்திருக்கிறது. இந்த விலை குறைவுக்கு என்ன காரணம்? இது இன்னும் தொடருமா என்பது குறித்து பார்க்கலாம்.

உலக அளவில் பாதுகாப்பான முதலீடாக பெருவாரியான மக்களால் பார்க்கப்படுவது தங்கம்தான். ‘கையில நாலு சவரன் தங்கம் இருந்தால் அவசர ஆபத்துக்கு வைக்கலாம் எடுக்கலாம்’ என்ற மனநிலையில் இருக்கும் மக்கள், அதனை ஒரு பாதுகாப்பான முதலீடாகவும் பார்க்கின்றனர். இதனாலேயே எந்த அளவுக்கு விலை உயர்வு இருந்தாலும், அதன் மீதான ஈர்ப்பு குறைவதில்லை. இந்த நிலையில்தான், தினம்தோறும் உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த 3ம் தேதி புது உச்சத்தை தொட்டது. அதன்படி, ஒரு சவரன் 68,480 ரூபாய்க்கு விற்பனையாகி பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தது.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களாக தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது. கடந்த 4ம் தேதி சவரனுக்கு 1,280 ரூபாய் குறைந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களிலும் விலை குறைந்தது. தொடர்ந்து இன்றைய தினமும் சவரனுக்கு 480 ரூபாய் விலை குறைந்திருக்கிறது. அதன்படி, 22 காரட் தங்கம் ஒரு சவரன் 65 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களாக என்று பார்த்தால், சவரனுக்கு 2, 680 ரூபாய் வரை குறைந்துள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, தங்கம் மீதான முதலீடு குறைந்திருப்பதால், விலையும் குறைந்து வருகிறது.

இந்த நிலையில், தங்கம் விலையில் இந்த திடீர் சரிவுக்கு என்ன காரணம்.. எதிர்வரும் நாட்களிலும் இது தொடருமா என்பது குறித்து தங்க நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானியிடம் பேசினோம்.. அப்போது, இப்படி பதிலளித்திருக்கும் சலானி, வரும் காலங்களில் தங்கம் விலை அதிகரிக்கவே அதிக காரணம் இருப்பதாகவும், விலை குறைவதற்கு வாய்ப்புகளும் குறைவு என்று விளக்கியுள்ளார். அப்படிப்பார்த்தால், விலை சரிவில் இருக்கும்போதே தங்கத்தை வாங்கி வைத்துவிடுவது முதலீட்டுக்கு கைகொடுக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.