தமிழ்நாடு

“அந்த போலீஸ் ஸ்டேஷனா இல்ல இந்த ஸ்டேஷனா”- நகை பறிகொடுத்தவர் அலைக்கழிப்பு

“அந்த போலீஸ் ஸ்டேஷனா இல்ல இந்த ஸ்டேஷனா”- நகை பறிகொடுத்தவர் அலைக்கழிப்பு

webteam

ஓடும் பேருந்தில் தங்க நகைகளை பறிகொடுத்தவரை அலைக்கழித்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அந்திவாடி பகுதியை சேர்ந்தவர் நீலம்மா. இவர் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியிலிருந்து அந்திவாடிக்கு தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது தான் வைத்திருந்த பையில் தங்க நகைகளையும் வைத்திருந்துள்ளார். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் நீலம்மா அசந்த நேரத்தில் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். பையில் இருந்த தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர் கூச்சலிட்டுள்ளார்.

உடனே அந்திவாடியில் இறங்கி, தங்க நகைகள் காணாமல் போனதாக ஓசூர் நகர காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார். ஆனால் போலீசார் மத்திகிரி போலீசில் புகார் கொடுக்குமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர். மத்திகிரி போலீசார் மீண்டும் ஓசூர் நகர காவல்நிலையத்திற்கு அனுப்பி வைக்க, மீண்டும் ஓசூர் போலீசார் மத்திகிரி காவல்நிலையத்திற்கு செல்லுமாறு சொன்னதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியடைந்த அவர் மனம் உடைந்த நிலையில் கதறி அழுததை பார்த்த பொதுமக்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தொலைபேசி மூலமாக தகவல் தெரிவித்தனர். அவர் உத்தரவின்படி ஓசூர் நகர போலீசார் புகாரை பெற்றுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி, அலட்சியமாக நடந்த அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுத்து பறிபோன நகைகளை மீட்டுத் தர உத்தரவிட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.