தமிழ்நாடு

பரோட்டா சாப்பிட்டால் தங்கம் பரிசு: பிரியாணி கடை விளம்பரத்திற்கான புதிய யுக்தி

kaleelrahman

தூத்துக்குடியில் 27 பரோட்டா, 1 சிக்கன் ரைஸ், பலூடா ஆகியவற்றை ஒரே நேரத்தில் விரைவாக சாப்பிட்டு முடித்தால் தங்க நாணயம் பரிசு என புதிய உணவகம் ஒன்று அறிவித்துள்ளது.

தொழில் நகரமான தூத்துக்குடி மாநகராட்சியில் சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்டது விஐபி பிரியாணி கடை. இந்த கடையில் கடந்த சில நாட்களாக பரோட்டா திருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடைக்கு சாப்பிட வருபவர்கள் யாரேனும் 27 புரோட்டா, 1 சிக்கன் ரைஸ், பலூடா ஆகியவற்றை ஒரே முறையில் சாப்பிட்டு முடித்தால் தங்க நாணயம் பரிசாக வழங்குகின்றனர். இதை அறிந்த இளைஞர்கள் போட்டியில் கலந்து கொள்ள நான், நீ என போட்டி போட்டுக் கொண்டு முன்பதிவு செய்து வருகின்றனர்.

போட்டியில் கலந்து கொண்டு நிர்ணயிக்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு முடித்தால் வெற்றி பெறுபவர்களுக்கு இலவசமாக ஒரு கிராம் தங்க நாணயம் பரிசாக வழங்குகின்றனர். சாப்பிட்டதற்கு பணம் செலுத்த தேவையில்லை. மாறாக தோற்றுவிட்டால் சாப்பிட்ட உணவுக்கு மட்டும் பணம் செலுத்திவிட்டு செல்ல வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தூத்துக்குடி மாநகர இளைஞர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற பூபாலராயபுரம் பகுதியைச் சேர்ந்த அருண் பிரகாஷ் கூறுகையில், “எளிதாக போட்டியில் வென்று விடலாம் என்ற நினைப்புடன் தான் கலந்து கொண்டேன். ஆனால், போட்டி தொடங்கி சில மணித் துளிகளிலே என்னால் முழுவதையும் சாப்பிட முடியுமா என சந்தேகம் தோன்றியது. இருப்பினும் மன உறுதியுடன் பொறுமையாக இருந்து அனைத்து உணவுகளையும் சாப்பிட்டு முடித்து போட்டியில் வெற்றியும் பெற்று விட்டேன். தற்பொழுது அறிவித்தபடி ஒரு கிராம் தங்க நாணயத்தையும் அவர்கள் எனக்கு பரிசாக வழங்கி விட்டனர்” என்றார்.

பரோட்டா திருவிழா குறித்து கடை உரிமையாளர் கண்ணா பாண்டியன் கூறுகையில், “கடையை விளம்பரப்படுத்தும் நோக்கில் புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில் பரோட்டா திருவிழா நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு தங்க நாணயம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். இதற்கு நல்ல வரவேற்பு உள்ளது” என்றார்.