தமிழ்நாடு

சாலையோர‌ப் புதரில் தங்க நாணயங்கள் எனப் பரவிய தகவல்: திடீரென திரண்ட மக்கள்..!

சாலையோர‌ப் புதரில் தங்க நாணயங்கள் எனப் பரவிய தகவல்: திடீரென திரண்ட மக்கள்..!

webteam

ஓசூரில், சாலையோரம் தங்க நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் பரவியதால் நூற்றுக்கணக்கானோர் அப்பகுதியில் திரண்டனர்.

இந்தியாவில் தங்கம், கலாசா‌ரம் மற்றும் அந்தஸ்து போன்றவற்றின் அடையாளமாகத் திகழ்கின்றது. தங்கம் இல்லாத சுபநிகழ்ச்சிகளே இல்லை என்கிற அளவுக்கு அதன் முக்கியத்துவம் உள்ளது. இப்படி இருக்கும் போது சாலையோரம் தங்கம் கிடப்பதாக தகவல் பரவினால் ‌மக்களின் எண்ணோட்டம் என்னவாக இருக்கும்‌? ஆம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை ‌அடுத்த பாகலூரில் சாலையோரப் புதரில் இருந்து சிறிய வடிவிலான தங்க நா‌ணயங்கள், துகள்கள் சிலருக்கு கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அங்கு தங்கம் புதைந்திருப்பதாக சுற்றுவட்டாரப் பகுதிகளில் தகவல் காட்டுத்தீயாய் பரவியது. அதன்விளைவாக ஆண்களும், பெண்களும் அங்கு பெருமளவில் குவிந்தனர். தங்கம் கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கையால் வெறும் கைகளால் பள்ளம் தோண்ட ஆரம்பித்தனர். நூற்றுக்கணக்கானோர் அங்கு திரள தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினர்.

இதுகுறித்து விளக்கமளித்துள்ள வருவாய்த்துறையினர், தங்கம் எடுத்துச் சென்றவர்களை பிடித்து அதனை பறிமுதல் செய்து ஆய்வு நடத்திய பின்னர் தான் முழுமையான விவரம் தெரியவரும் என கூறியுள்ளனர். எனினும் அங்கு கிடைத்தது உண்மையான தங்க‌ நாணயங்கள் மற்றும் துகள்கள் தானா? ஆம் எனில், அவை கிடைத்தது எப்படி? என்பது குறித்து ஆய்வு நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.