தங்கக்கட்டிகளை தேடும் பணி
தங்கக்கட்டிகளை தேடும் பணி  புதிய தலைமுறை
தமிழ்நாடு

ராமநாதபுரம்: கடலில் வீசப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள்! தேடும் பணி தீவிரம்!

PT WEB

இலங்கையிலிருந்து படகில் கடத்திவரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக்கட்டிகள் ராமேஸ்வரம் அருகே பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நடுக்கடலில் வீசப்பட்டதாக கூறப்படும் தங்கக்கட்டிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. நள்ளிரவில் படகு ஒன்றை நிறுத்தி சோதனை செய்த மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள், அதிலிருந்த அசாருதீன், சாதிக் அலி ஆகியோரைப் பிடித்து விசாரித்தனர். அப்போது இலங்கையிலிருந்து 8 கிலோ தங்கத்தை கடத்திவந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு 4 கோடி ரூபாய் கூறிய அதிகாரிகள், தங்கக்கட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.

சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த மற்றொரு படகைச் சோதனையிட்டபோது எதுவும் சிக்கவில்லை. கடத்தல் தங்கத்தை நடுக்கடலில் வீசினார்களா என படகிலிருந்த 3 பேரை பிடித்து வருவாய் புலனாய்வுத் துறையினர் விசாரித்துவருகின்றனர். மொத்தம் 10 கோடி ரூபாய் மதிப்புலான தங்கக் கட்டிகள் இலங்கையிருந்து கடத்தப்பட்டதாகக் கூறப்படுவதால், நடுக்கடலில் தேடும்பணி நடைபெற்று வருகிறது. சில மாதங்களுக்கு முன் இதேபோன்று நடுக்கடலில் தூக்கி வீசப்பட்ட 26 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது. கடந்தகாலங்களில் இலங்கையிலிருந்து பிஸ்கெட் வடிவிலான தங்கக்கட்டிகள் ராமேஸ்வரம் பகுதிக்கு கடத்திவரப்பட்டன. பிஸ்கெட் வடிவ தங்கக்கட்டிகளில் உற்பத்தியாளரது விவரம் இருப்பதால் வணிகர்கள் மற்றும் கடத்தல்காரர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, தற்போது தங்கத்தை உருக்கி கட்டியாக கடத்துவது அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக, இலங்கையில் திருடப்படும் நகைகள் உருக்கப்பட்டு கடத்திவரப்படுவதாகக் கூறப்படுகிறது.