ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடம் உள்ளது. இன்று நடைபெறும்
முத்துராமலிங்கத் தேவரின் 113வது ஜெயந்தி விழா மற்றும் 58 குருபூஜை விழாவையொட்டி அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
கலந்து கொண்டு முத்துராலிங்கத் தேவர் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அரசியல் கட்சித்தலைவர்களும், பல்வேறு தரப்பினரும் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்
அதேபோல் திமுக தலைவர் ஸ்டாலின் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். இந்த நிலையில் ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது. பொதுவாக தலைவர்களின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் ட்ரெண்ட் செய்வது வழக்கமாக உள்ளது.
தமிழகம் வருகை தந்தபோது பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் எதிராக ட்விட்டர் ட்ரெண்ட் செய்யப்பட்டது. அதேபோல் தற்போது ஸ்டாலினுக்கு எதிராக அதிமுக, பாஜக ஆதரவாளர்கள் ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே முத்துராமலிங்கத் தேவர் குறித்து பதிவிட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, ''இந்திய சுதந்திரப் போரில், நேதாஜியோடு கரம் கோர்த்து, தமிழகத்துக்கு பெருமை தேடித் தந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் பிறந்த தினத்தில் அவரின் வீரத்தை நினைவு கூர்வோம். சாதி வேற்றுமைகளை கடந்து தமிழர்களாக உயர்ந்து நிற்க வேண்டும் என்ற அவரது நோக்கத்தை நிறைவேற்றுவோம்'' என தெரிவித்துள்ளார்