வைகையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கித் தவித்த 100-க்கும் மேற்பட்ட ஆடுகளை தீயணைப்பு துறையினர் படகில் சென்று மீட்டனர்.
வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக வைகை அணையில் இருந்து 7 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டு கடைமடை பகுதியான ராமநாதபுரத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் ராமநாதபுரத்தை அடுத்த புல்லங்குடி பகுதியில் மேய்ச்சலுக்குச் சென்று 100-க்கும் மேற்பட்ட ஆடுகள், வெள்ளப் பெருக்கில் சிக்கி கரை திரும்ப முடியாமல் தவித்தன. இதையடுத்து ஆடு மேய்ப்பவர்கள் உடனடியாக ராமநாதபுரம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
அதனைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் ரப்பர் படகில் சென்று கரை திரும்ப முடியாமல் தவித்த ஆடுகளை படகில் ஏற்றி மீட்டனர். உயிரை பணயம் வைத்து ஆடுகளை மீட்ட தீயணைப்புத் துறையினருக்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.