தமிழ்நாடு

வாக்காளர் அட்டை எடுக்க போறீங்களா?: இனி உங்க ஆதார் எண்ணையும் கேட்பாங்க!

PT

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டது.


.

போலி வாக்காளர்களுக்கு கடிவாளம் போட நடவடிக்கை...

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது போலி வாக்காளர்களுக்கு கடிவாளம் போடும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. தேர்தல் நடக்கும்போதெல்லாம் போலி வாக்காளர்கள் குறித்த புகார்கள் எழுவதும் அவர்களை நீக்குவதும் வழக்கமான ஒன்றாக உள்ளது. எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதை தடுக்கும் வகையில் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்தத்தின்படி 4 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார். அதன்படி, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்பட உள்ளது. வாக்காளாராக பதிவுசெய்ய வருவோரிடம் அதிகாரிகள் இனி ஆதார் அட்டையை காண்பிக்குமாறு கோருவதற்கு சட்டத்திருத்தம் அனுமதிக்கிறது.

தற்போது ஜனவரி 1ஆம் தேதி கணக்கின்படி 18 வயது பூர்த்தியானவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும் நிலையில் அந்த வசதி ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபர் 1 ஆகிய தேதிகளின்படி 18 வயது பூர்த்தியானவர்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதால் இனி ஓராண்டு காத்திருக்க தேவையில்லை.