தமிழ்நாடு

"அரசாங்கம் எப்படி அறத்தோடு செயல்பட வேண்டும் என கம்பராமாயணம் எடுத்துரைக்கிறது"- ஜி.கே.வாசன்

webteam

“குழந்தைகள் ஆங்கில மொழியை பேசுவதை பெருமையாக நினைக்கும் பெற்றோர், தங்களின் தாய்மொழி தமிழ் என்பதை மறந்து விடக்கூடாது” என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சேலத்தில் கம்பன் கழக 50-வது பொன்விழா ஆம் ஆண்டு நிறைவு விழா நடைபெற்றது. இதில், முன்னாள் முதல்வர் பழனிசாமி, தமாகா தலைவர் ஜிகே.வாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் கம்பன் கழகத்தின் சார்பில் கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நல உதவிகளை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து, பொன்விழா மலரை ஜிகே.வாசன் வெளியிட எடப்பாடி பழனிசாமி பெற்றுக் கொண்டார். இதையடுத்து விழாவில் உரையாற்றிய ஜிகே.வாசன், “தமிழ் மக்களின் அனைத்து ஒற்றுமை உணர்வுகளையும் காத்து வருவது நம் இலக்கியங்கள். ஒரு அரசாங்கம் எப்படி அறத்தோடு செயல்பட வேண்டும் என்பதை கம்பராமாயணம் எடுத்துரைக்கிறது.

கம்பன் எடுத்துரைத்தது போல் அறத்தோடு முந்தைய அதிமுக ஆட்சி நடந்தது. மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் முந்தைய ஆட்சி நடந்தது. வருங்காலத்தில் கம்பன் குறிப்பிடும் நல்லாட்சி தமிழகத்தில் அமைய வேண்டும். எளிமை, நேர்மை என்ற காமராசர் ஆட்சிக்கு பிறகு மீண்டும் தமிழகத்தில் அதுபோன்ற ஆட்சி அமைந்திட கம்பன் விழாக்கள் வழிவகுக்க வேண்டும்” என்று ஜி.கே.வாசன் பேசினார்.

இதைத் தொடர்ந்து பேசிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “எழுத்துகள் வார்த்தைகள் மட்டுமின்றி உணர்வுகளையும் கோர்த்து காவியம் படைத்தவர் கம்பர். கம்பராமாயணத்தின் கருத்துகளை மக்களிடையே சேர்க்கவும், சேர்ப்பவர்களை ஊக்குவிக்கவும் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா, கவிச்சக்கரவர்த்தி விருதை வழங்கினார்.

இன்றைய பெற்றோர், தங்கள் குழந்தைகளை தமிழில் படிக்க வைக்க வேண்டும். குழந்தைகள் ஆங்கிலத்தில் பேசுவதையே பெற்றோர்கள் பெருமையாக நினைக்கின்றனர். தமிழில் பேசும் வழக்கம் குறைந்து வருவது வேதனையளிக்கிறது. தமிழ், தாய்மொழி என்பதை பெற்றோர் மறந்துவிடக்கூடாது” என்று பேசினார்.