பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்படவில்லை என்றும், வரும் 8ம் தேதி நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாகவும், அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் ராமதாஸிடம் இருந்து வரும் அறிக்கைகளில் இடம்பெற்றிருக்கும் "செயல் தலைவர்அன்புமணி" என்ற பெயர் நீக்கப்பட்டுள்ளது. வழக்கமாக புதிய நிர்வாகிகள் நியமனக் கடிதங்களின் நகல்கள் அன்புமணிக்கு அனுப்பப்படும் நிலையில், இம்முறை ராமதாஸ் அதைத் தவிர்த்துள்ளார். மேலும் கட்சியின் அதிகாரமிக்க அமைப்பான நிர்வாகக்குழுவில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டு, 21 பேர் கொண்ட புதியநிர்வாகக் குழுவை, அக்கட்சியின்நிறுவனர் ராமதாஸ் அமைத்துள்ளதாக தகவல் வெளியானது.
ஆனால் இதை மறுத்துள்ள பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, அன்புமணி நீக்கப்படவில்லை என்றும், தவறான தகவல் பரப்பப்படுவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
இதற்கிடையே ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதலால் கொறடா பதவி யாருக்கு என்ற சர்ச்சை எழுந்துள்ளது. பாமகவின் சட்டமன்றக் கொறடாவாக இருந்த அருளை நீக்கி, மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமாரை புதிய கொறடாவாக நியமித்துள்ளதாக பாமக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரிடம் மனு அளித்தனர். இதற்குப் போட்டியாக அருள் எம்.எல்.ஏ.வும் மனு அளித்தார். சட்டமன்றக் கட்சிக்கு 8 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்பதால், 5 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட பாமகவுக்கு கொறடா பதவி கிடையாது என்றும், சபாநாயகர் இதில் தலையிட மாட்டார் என்றும் சட்டசபை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.