தமிழ்நாடு

மாற்று இடம் தாருங்கள் - சுதந்திர தினத்தன்று வனத்தில் உள்ளிருப்பு போராட்டம்

மாற்று இடம் தாருங்கள் - சுதந்திர தினத்தன்று வனத்தில் உள்ளிருப்பு போராட்டம்

webteam

வால்பாறை பகுதியில் வசித்து வரும் ஆதிவாசி பழங்குடியினர் தங்களுக்கான மாற்று இடத்தை வழங்கக் கோரி வனப்பகுதியினுள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ளே வனப்பகுதியில் ஆதிவாசி பழங்குடி மக்கள் சுமார் 2500 க்கும் மேற்பட்டோர் வாழ்ந்து வருகிறார்கள். இதில் கள்ளார் வனப்பகுதியில் 23 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த 2018, 2019 ஆண்டுகளில் அப்பகுதிகளில் பெய்த கனமழையால் அந்தப்பகுதி முழுவதும் சேதமடைந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் தங்களை காத்துக் கொள்ள அங்கிருந்து 5 கிமீ தொலைவில் உள்ள ஒரு இடத்தில் குடிசை அமைத்துள்ளனர். இதனையறிந்த வனத்துறையினர் அதனை அப்புறப்படுத்தியுள்ளனர்.

இதனால் வேதனையடைந்த அப்பகுதி மக்கள் வட்டாட்சியரிடம் தங்களது நிலைமையை எடுத்துக் கூறி தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு வட்டாட்சியர் வனத்துறை சார்பில் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி அவர்களை தாய்முடி தேயிலை தோட்டக் குடியிருப்புகளில் தங்க வைத்துள்ளார். அவர்கள் அங்கிருந்து வனப்பகுதியில் இருந்த தோட்டங்களில் விவசாயம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்.

அந்த ஒரு வருடத்தில் அதிகாரிகள் மாறிப்போக இவர்களது கோரிக்கை கிடப்பில் போடப்பட்டது. இதனால் வேதனையடைந்த அவர்கள் புதிதாக வந்த வட்டாட்சியரிடம் மாற்று இடம் வழங்க கோரிக்கை வைத்தனர். அதன் பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் அவர்களுக்கான மாற்று இடம் வழங்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து அவர்கள் மாற்று இடம் வழங்கக் கோரி சுதந்திரமான இன்று நடைபயண போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனையறிந்த வட்டாட்சியர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். ஆனால் அவர்கள் வனப்பகுதிக்குள்ளே பதாகைகளை ஏந்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மாற்று இடம் வழங்கப்படும் என உத்திரவாதம் அளித்ததையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.