death men
death men pt desk
தமிழ்நாடு

குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து காதலனை கொலை செய்தாரா 16 வயது சிறுமி?- சென்னையில் பகீர் சம்பவம்

Kaleel Rahman

கேரளாவில் கல்லூரி மாணவி கிரீஷ்மா தன்னுடைய காதலனுக்கு குளிர் பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சென்னையிலும் அதே போன்ற ஒரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார் (18). இவர் திருப்பூரில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார். தனது பிறந்த நாளை சென்னையில் உள்ள தன்னுடைய காதலியுடன் கொண்டாடுவதற்காக கடந்த 7 ஆம் தேதி திருப்பூரில் இருந்து சென்னைக்கு வந்திருக்கிறார். சென்னையின் பல்வேறு இடங்களை சுற்றிவிட்டு 7 ஆம் தேதி இரவு மீண்டும் திருப்பூர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தபோது, அவரது காதலியான 16 வயது சிறுமி வாங்கி வந்த குளிர்பானத்தை சஞ்சீவ் குமாரிடம் கொடுத்ததாகவும், அதை சஞ்சீவ் குமார் குடித்த பின்னர், 'என்னை மன்னித்துவிடு உன்னை பழி வாங்குவதற்காகவே சென்னைக்கு வரவழைத்து குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து கொடுத்தேன்’ என காதலி சிறுமி சஞ்சய் குமாரிடம் அழுது கொண்டே தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே சிறுமி, கோயம்பேடு பேருந்து நிலையம் வந்திருப்பதை அறிந்த அவரது தாயார் மற்றும் மூத்த சகோதரி ஆகிய இருவரும் அங்கு வந்து சஞ்சீவ் குமாரை கடுமையாக தாக்கி செல்போனையும் உடைத்துள்ளனர். இதனால் பயந்துபோன சஞ்சய் குமார் இரவு முழுவதும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலேயே தங்கிவிட்டு மறுநாள் காலை ஆவடியில் உள்ள தனது மாமா செல்வராஜ் என்பவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு சென்ற அவர், தான் காதலித்த பெண் தனக்கு விஷம் கொடுத்து விட்டதாகக் கூறியதை அடுத்து அவரை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்துள்ளனர். அதன் பின்னர் உடல்நிலை மோசமடையவே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சிகிச்சையில் இருந்த சஞ்சீவ் குமார், தன்னுடைய காதலி, தனக்கு குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து கொடுத்து விட்டதாகக் காவல் துறையினரிடம் மரணம் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

இதன் பின்னர் சஞ்சீவ் குமாரை தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை பார்த்துக் கொள்வதாகக் கூறி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து, நேற்று அவரது உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் போகும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்ததை அடுத்து உடனடியாக சஞ்சீவ் குமாரின் உடல் அவருடைய சொந்த ஊரான பரமக்குடிக்கு கொண்டு சென்றுள்ளனர். இதனிடையே சஞ்சீவ் குமாரின் மாமா, கோயம்பேடு காவல்துறையினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை தெரிவித்துள்ளார். அதற்கு காவல் துறையினர், பிரேத பரிசோதனை செய்யாமல் இறுதிச் சடங்கு நடத்தக் கூடாது என கூறி பரமக்குடியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சஞ்சீவ் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதைத் தொடர்ந்து கோயம்பேடு காவல்துறை அதிகாரிகள் கொலை, கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், தாக்குதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் சஞ்சீவ் குமார் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக காதலி சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் அது காதலாக மாறிய நிலையில், கடந்த ஆண்டு சிறுமியின் பெற்றோருக்கு இந்த விவகாரம், தெரியவந்ததை அடுத்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சஞ்சீவ் குமாரை (17) கைது செய்து கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி இருக்கிறார்கள்.

இதன் பின்னரும் சஞ்சீவ் குமார் அடிக்கடி சிறுமியிடம் தொலைபேசி மூலமாக பேசி வந்ததும் தெரிய வந்திருக்கிறது. மேலும் கடந்த 7 ஆம் தேதி சென்னை வந்த சஞ்சீவ் குமார், காலையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு சிறுமியுடன் சுற்றித் திரிந்ததும் தெரிய வந்துள்ளது இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது சஞ்சீவ் குமார், சிறுமியுடன் கடைக்குச் சென்று குளிர்பானத்தை வாங்கி வருவதும் தெரிய வந்திருக்கிறது.

இதன் பின்னர், சிறுமி கோயம்பேட்டில் இருக்கும் தகவலை அறிந்த அவரது தாயார் மற்றும் மூத்த சகோதரி ஆகிய இருவரும் அங்கு வந்து சஞ்சீவ் குமாரை கடுமையாக தாக்கிவிட்டு சிறுமியை அழைத்துச் சென்றதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே அண்ணா நகர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டிருப்பதால் மீண்டும் காவல் துறையினரால் கைது செய்யப்படுவோமோ என்ற பயத்தில் குளிர்பானத்தில் எலி மருந்தை கலந்து அவரே குடித்திருக்கலாமா என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், பரமக்குடி அரசு மருத்துவமனையில் வைத்திருந்த சஞ்சீவ் குமாரின் உடல், கூறாய்வு பரிசோதனை செய்யப்பட்ட பிறகு பரிசோதனை அறிக்கையை பெற்றுக் கொண்டு கோயம்பேடு போலீசார், உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து உறவினர்கள் அவரது உடலை நல்லடக்கம் செய்தனர்.