சென்னையில் 4 வயது சிறுமியை கடத்தியதாக கைது செய்யப்பட்டுள்ள இளைஞர், எப்படி கடத்துவது என யூ-டியூப்பை பார்த்து கற்றுக்கொண்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரது காதலி கடத்தலுக்கு சப்பாத்தியைப் பயன்படுத்தியுள்ளார்.
சென்னை ஷெனாய் நகரைச் சேர்ந்த அருள்ராஜ் - மருத்துவர் நந்தினி தம்பதியின் 4 வயது மகளை அவர்களது வீட்டு பணிப்பெண் அம்பிகா மற்றும் அவரது காதலர் முகமது கலிமுல்லா ஆகியோர் கடத்திச் சென்றனர். தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் இருவரையும் கைது செய்து குழந்தையை மீட்டனர். அவர்களுக்கு சிறுமியின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் குழந்தையை கடத்தியது எப்படி என காவல்துறையினரிடம் அம்பிகா வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், “ சிறுமிக்கு சப்பாத்தி என்றால் மிகவும் பிடிக்கும். பள்ளியில் இருந்து வந்த சிறுமியிடம் வீட்டில் சப்பாத்தி செய்யவில்லை, நாம் இருவரும் வெளியே போய் சப்பாத்தி சாப்பிடலாம்” எனக்கூறி குழந்தையை கடத்திச் சென்றதாக கூறியுள்ளார்..கடத்தலுக்கு அம்பிகா சப்பாத்தியை பயன்படுத்தியது போல், கலிமுல்லா யூ-டியூப்பை பயன்படுத்தியுள்ளார். அதிலுள்ள வீடியோக்களைப் பார்த்தே கடத்தலைப் பற்றி அறிந்து கொண்டதாக அவர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
சிறுமி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கலிமுல்லா "ஓ காதலனே" என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அந்தப் படம் சரியாக ஓடாததால் மீண்டும் நடிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. இதனால் நாமே படம் எடுத்து அதில் நடிக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார் கலிமுல்லா. அம்பிகாவுக்கும் சினிமாவில் நடிக்கும் ஆசை இருந்தது. அதற்கு பணம் தேவைப்பட்டதால் இருவரும் கடத்தலில் இறங்கியுள்ளனர். பிடிபட்டவுடன் இருவரும் உன்னால்தான் இப்படி ஆகிவிட்டது என ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி காவல் நிலையத்திலேயே சண்டையிட்டுள்ளனர். உன்னால நான் கெட்டேன், என்னால நீ கெட்ட என்பது போல் ஆகிவிட்டது கலிமுல்லா மற்றும் அம்பிகாவின் கதை.