பட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில், சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஊரகத் தொழில்துறையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் பென்ஜமின் சட்டப்பேரவையில் வெளியிட்டார். இரு சுழற்சி இன வெண்பட்டு நூலுக்கு 20 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் பென்ஜமின் கூறினார். வெண்பட்டு உற்பத்தி திறனை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் 3 சிறந்த பட்டு விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படும் என்றும் புதிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
முதலிடம் பிடிக்கும் விவசாயிக்கு ஒரு லட்சம் ரூபாயும், இரண்டாவது இடம் பிடிப்பவருக்கு 75 ஆயிரம் ரூபாயும், மூன்றாமிடம் பிடிப்பவருக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாவட்ட அளவில் 3 சிறந்த பட்டு விவசாயிகளுக்கு 25 ஆயிரம், 20 ஆயிரம், 15ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.