கஜா புயல் வரும் 15-ஆம் தேதி கரையைக் கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதையடுத்து தலைமை செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்புக் குழுவை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் தமிழக வருவாய்த்துறையினர் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இன்று மாலை 4 மணியளவில் இக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வடகிழக்கு பருவமழைக்கான ஏற்கெனவே எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், தற்போதைய புயல் எச்சரிக்கையை அடுத்து மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
இதனிடையே கஜா புயல் காரணமாக, அனைத்து கடலோர மாவட்டங்களிலும் மறு உத்தரவு வரும் வரை மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், புயல் எச்சரிக்கை காரணமாக, ஆந்திராவின் நெல்லூர் அருகே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 160 மீன்பிடி விசைப்படகுகளை பத்திரப்படுத்தவும், மீனவர்களை திரும்ப அழைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீனவர்களை அழைத்துவர நெல்லூர் கடற்பகுதிக்கு மீன்வளத்துறை அதிகாரிகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர் என்றும் புயல் பற்றிய தகவல்களை மீனவர்களுக்கு தெரிவிக்க பேரிடர் மேலாண்மை கட்டுபாட்டு அறை உருவாக்கப்பட்டு 24 மணி நேரமும் செயல்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் அனைவரும் செல்போன் மூலம் கட்டுபாட்டு அறையை தொடர்பு கொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மீன்பிடி படகுகளையும் பத்திரமாக மீன்பிடி துறைமுகம், மீன் இறங்குதளங்குகளில் நிறுத்திடவும் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.